சென்னை, மார்ச். முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ரேலா மருத்துவமனை வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையை ரேலா மருத்துவமனை மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்ட சுஜாதா என்னும் 36 வயது பெண் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருக்கு பொருத்தப்பட்ட இருதயம் மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞரின் இருதயம் மதுரையிலிருந்து சென்னைக்கு 45 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுஜாதா என்னும் பெண் மருத்துவ ஆலோசனைக்காக ரேலா மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு இருதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இந்த பிரச்சினைக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என்று அவரது குடும்பத்தினர் கருதினர். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ரெலா மருத்துவமனைக்கு TRANSTAN (தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம்) அமைப்பில் இருந்து இந்த பெண்ணுக்கு தேவையான இருதயம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 27-ந்தேதி இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிள்ள . அவரால் இன்று தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடிகிறது. தானே உடைகளை அணிதல், யாருடைய உதவியும் இல்லாமல் தானே நடந்து செல்லுதல், உணவு உட்கொள்ளுதல் முதலான அனைத்து வேலைகளையும் யாரையும் நம்பி இருக்காமல் தானே செய்து வருகிறார்.
இது குறித்து சுஜாதா கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு முன் நீண்ட தூரம் நடந்தாலோ அல்லது மாடிப் படிகளில் ஏறினாலோ எனக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். அந்த சமயங்களில் நான் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னரே செல்வேன். சில சமயங்களில் என்னால் பேசக்கூட முடியாத சூழல் ஏற்படும். அவ்வாறு பேசும்போதும்கூட எனக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமமாக இருக்கும். எனக்கு இருதயத்தை தானம் கொடுத்து எனக்கு மறுவாழ்வு அளித்த இளைஞரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அளித்தவரின் குடும்பத்தினர் இதை செய்யாதிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது என்று தெரிவித்தார்.
இது குறித்து ரேலா மருத்துவமனை மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குனர் டாக்டர் சந்தீப் அட்டாவர் கூறுகையில், நோயாளி மிகவும் மோசமான சூழலில் இருந்தார். அவரது இருதயத்தின் செயல்பாடு இறுதி நிலையை எட்டியிருந்தது. அவருக்கு ஒரே வழி இருதய மாற்று அறுவை சிகிச்சை மட்டும்தான். இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பின் அவர் அவர் படிப்படியாக குணமடையத் தொடங்கினார் 2 நாட்களுக்கு பின் நடக்கத் தொடங்கி 4வது நாளில் இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் தானே தனது வேலைகளை செய்ததோடு இயல்பான உணவு பழக்கவழக்கத்திற்கும் மாறினார் என்று தெரிவித்தார்.
இது குறித்து ரேலா மருத்துவமனை தலைவரும் பேராசிரியருமான முகமது ரேலா கூறுகையில், இது எங்களின் மிகப்பெரிய சாதனை ஆகும். பொருத்தமான உடல் உறுப்புக்காக காத்திருக்கும் சூழலில் நோயாளிகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய சூழல் இருக்கும். சவாலான இந்தக் காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் சரியான நபரிடமிருந்து பொருத்தமான இருதயம் கிடைத்ததால் இது சாத்தியமாகி உள்ளது. நோயாளிகள் மிகவும் நோய் வாய்ப்பட்டு இயலாத சூழலுக்கு போகும் முன் அவர்களுக்கு சரியான நேரத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பெண்ணிற்கு பொருத்தப்பட்ட இருதயம் மதுரையில் மூளைச் சாவு அடைந்த ஒரு இளைஞன் இருதயம் ஆகும். அதை சரியான நேரத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு கொண்டுவர உதவிய அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மற்றும் சென்னையில் உள்ள அவர்களது குழுக்களை சேர்ந்த அனைவருக்கும் ரெலா மருத்துவமனை தனது நன்றியை தெரிவித்துள்ளது.