சென்னை தோள் முழங்கை, கை மையத்தை (CHENNAI UPPER LIMB UNIT) ஆணையர் J.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

தோள்பட்டை, முழங்கை மணிக்கட்டு மற்றும் கையை பாதிக்கும் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் சிறப்பு மையம் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை TTK சாலையில் அமைந்துள்ள சென்னை தோள் முழங்கை, கை மையத்தை (CHENNAI UPPER LIMB UNIT), சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவிலும் இங்கிலாந்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர் ராம் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, தோள்பட்டை மாற்று-3D திட்டமிடல், ஹோலோலென்ஸ் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி நேவிகேஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு மற்றும் கைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் ராம் சிதம்பரம் கூறுகையில், “CHENNAI UPPER LIMB UNIT-யில் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை ஆகியவற்றின் மூட்டுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை எலும்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். தோள் பட்டை மூட்டுகளில் தேய்மானமோ, டிஸ்லோகேஷனோ ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமானது. ஆனால் எங்களுடைய மையத்தில் மோசமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தோள் பட்டை மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

அதேபோல் மக்களிடையே தோள்பட்டை மற்றும் முழங்கை சம்பந்தமான சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பெரிய அளவில் புரிதல் இல்லை என்றும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.