இந்த குடியரசு தினத்தன்று இரவு 9 மணிக்கு, வீரமும், தியாகமும் நிறைந்த கார்கில் போரின் உண்மைக் கதைகளை ஒளிபரப்புகிறது HistoryTV18

இந்தியா, ஜனவரி, 2021: கார்கில் போர் முடிந்து 21 ஆண்டுகள் ஆன பிறகும், ஒட்டுமொத்த தேசத்தின் நினைவில் இந்திய வீரர்களின் தியாகம் இன்னும் பசுமையாய் பதிந்து இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது இந்தப் போர் தொடங்கியது. 60 நாட்கள் கடுமையான போருக்குப் பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்திய ராணுவம் மீட்டதோடு முடிவுக்கு வந்தது இந்தப் போர். இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தப் போரில், இந்திய ராணுவம் முழு வெற்றியை மட்டுமே ஏற்கும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது. ராணுவ அதிகாரிகளின் சிறப்பு அனுமதியோடும், வரலாற்று ஆவணங்களில் இருந்தும் தகவல்களை பெற்று “ஆபரேஷன் விஜய்” எனப் பெயரிடப்பட்ட இந்தப் போரில் வெற்றிபெற்ற கதையை HistoryTv18 போர்காட்சிகளின் தத்ரூபமான மறுஉருவாக்கம் மூலம் விவரிக்கிறது. அதிரடி காட்சிகள் நிறைந்த ‘Kargil: Valour & Victory’, ஜனவரி 26, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த ராணுவ ஆவணப்படம் கார்கில் போரின் நிகழ்வுகளை விவரிப்பதோடு, பல தலைமுறைகளுக்கு வீரத்துக்கும் தியாகத்துக்கும் உதாரணமாக விளங்கும், மனஉறுதியுடனும் வீரத்துடனும் போர்முனையில் சாகசம் புரிந்த ஐந்து அசாதாரண இளைஞர்களின் உண்மைக் கதைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக போரிட்ட பல கதாநாயகர்களின் பிரதிநிதிகளாக இவர்கள் பிரதிபலிக்கின்றனர். இந்தப் போரில் 30,000 இந்திய இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்; 500க்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர், மேலும் 1300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த ஆவணப்படம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை ஆகும். இந்தத் திரைப்படம் அந்தக் காலகட்டத்தில் இப்போரில் பங்கேற்ற பல அதிகாரிகளின் அனுபவங்களையும் பதிவு செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தரைப்படைத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக் PVSM, AVSM (ஓய்வு), 8-ஆவது மலைப்பகுதி ராணுவப்பிரிவின் முன்னாள் படைத்தலைவர் லெப். ஜெனரல் மொஹிந்தர் பூரி PVSM, UYSM (ஓய்வு), 8-ஆவது மலைப்பகுதி ஆயுதப் படைப் பிரிவு முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் லக்வீந்தர் சிங் YSM (ஓய்வு) போன்றவர்களும், பாதுகாப்பு யுக்தி ஆய்வாளரான நித்தின் ஏ. கோகலே போன்றவர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

கார்கில் போர், அணு ஆயுத பலம் பெற்ற உலகில், இந்திய துணைக்கண்டம் சந்தித்த முதல் ஆயுதப் போர். அண்டை நாட்டுப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு, கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் உறைபனி நிறைந்த, வாழ்க்கடினமான இமய மலையில் நமது ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இளம் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் லடாக் பகுதியின் பள்ளத்தாக்குகளிலும், மலைமுகடுகளிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு எதிரிகளை விரட்டி முக்கிய சிகரங்களை மீட்டனர். போரில் வெற்றியை ஈட்டிய அதே நேரத்தில் இந்தியா தனது திறன் மிக்க வீரர்கள் சிலரை இழந்திருந்தது. கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ் மற்றும் கேப்டன் விக்ரம் பத்ரா ஆகிய மூவருக்கும் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. கேப்டன் அனுஜ் நய்யருக்கு மஹாவீர் சக்ரா விருதும், கேப்டன் ஹனீஃப் உதினுக்கு வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டன. போர்முனையில் இவர்களின் அர்ப்பணிப்பை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி ஒளிபரப்பாகும் HistoryTV18-ன் புதிய ஆவணப்படம் இந்திய பாதுகாப்புப் படைகளை பெருமைப்படுத்தும் அதன் உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சி தயாரிப்புகளில் ஒரு புதிய வரவாகும். மலைகளின் உயர்வான பகுதிகளில் மறைந்து கொண்டு தாக்குதல் நடத்திய எதிரிகளை எதிர்கொண்ட துணிச்சல் மற்றும் தியாக செயல்களை ‘Kargil: Valour & Victory’ நம் கண்முன் நிறுத்துகிறது. இதில் இடம்பெறும் போர் தொடர்பான காட்சிகள் உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி லடாக் பனி மலையில் உருவாக்கப்பட்டுள்ளன. தோலோலிங், கலுபார், பாயிண்ட் 4875 (பின்னர் பத்ரா டாப் என பெயரிடப்பட்டது), மேற்கு துணைப் பிராந்தியத்தில் டைகர் ஹில்ஸ் மற்றும் டர்துக் (இது பின்னர் ஹனீஃப் துணை பிராந்தியப் பகுதி எனப் பெயரிடப்பட்டது) போன்ற இடங்களில் நடைபெற்ற உக்கிரமான சண்டைகள் HistoryTV18-இன் முத்திரை தரத்தோடு மறுஉருவாக்கம் பெற்றுள்ளன.

1999-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய எல்லைக்கு மிக அருகில், நமது ராணுவப் படை வீரர் லெப்டினன்ட் சவுரவ் காலியா மீது மறைந்திருந்து நடத்தப்பட்ட தாக்குதலும், அதன் பிறகு அவரை சித்ரவதைக்கு உள்ளாக்கிய விதம் போன்றவை ஒரு இரக்கமற்ற கொடுரமான திட்டத்தோடுதான் பாகிஸ்தான், இந்தப் போரைத் தொடங்கியது என்பதைக் காட்டியது. ஆப்ரேஷன் பதர் என்று பெயரிட்டு அவர்கள் தொடங்கிய இந்த போர்த் திட்டம் முழு பிராந்தியத்தை ஆதிக்கம் செய்ய பாதுகாப்புக் கோணத்தில் முக்கியமான சிகரங்களை இந்தியாவிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது. இந்திய எல்லைக்குள் ஏராளமானவர்கள் ஊடுருவியுள்ளனர் என்பது தெரிய வந்தபோது, நமது நாட்டு எல்லைகளின் புனிதத்தை காக்கவும், எதிரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலப்பகுதியை மீட்க தேவையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய நாடாளுமன்றம் நமது ராணுவத்திற்கு அனுமதி அளித்தது. இந்திய ஆயுதப்படை இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவு பீரங்கிகளையும், வெடிமருந்துகளையும் பயன்படுத்தியது. முதன்முறையாக, போபர்ஸ் பீரங்கிகள் எல்லையில் இருந்தபடி இலக்குகளை நோக்கி நேரடியாக குண்டு மழை பெய்தன. மறுபுறம், நமது இராணுவ வீரர்கள் மலைப்பகுதிகளுக்கு இடையே எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுகளைச் சமாளித்து முன்னேறிச் சென்றனர். நமது பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு அங்கமும், ஒற்றை இலக்கோடு களமிறங்கி போரிட்டன. ஆப்ரேஷன் விஜய்யின் ஆரம்ப நாட்களில் நாம் சந்தித்த பின்னடைவுகளைச் சமாளித்து, இந்தியப் படையின் இளம் வீரர்கள் மேற்கொண்ட உக்கிரமான தாக்குதல், யுக்திகள் மற்றும் போர்வித்தைகள் போரின் போக்கை திசை மாற்றின. நாம் இழந்திருந்த எல்லா மலை உச்சிகளையும் நமது வீரர்கள் மீட்டனர். தற்கொலை படைத் தாக்குதலுக்கு துணிந்த 24 வயதேயான கேப்டன் மனோஜ் பாண்டே, அசாத்தியமான துணிச்சலை வெளிப்படுத்திய 19 வயது கிரனேடியர் யோகேந்திர யாதவ், உச்சகட்ட தியாகத்துக்கு துணிந்த கேப்டன் ஹனீஃப் உதின், கேப்டன் அனுஜ் நாயர் மற்றும் ஷெர்ஷா என்ற புனைப் பெயர் கொண்ட கேப்டன் விக்ரம் பத்ரா உள்ளிட்ட பல வீரர்களும் பல்வேறு கட்டங்களில் மேற்கொண்ட சாகசங்களால் நமது இந்திய மூவண்ணக் கொடி மீண்டும் லடாக் மலை சிகரங்களின் உச்சியில் பட்டொளி வீசி பறக்கத் தொடங்கியது.

A+E Networks I TV18 இன் நிர்வாக இயக்குனரும், Network18 ஒளிபரப்பு தலைமை செயல் அதிகாரியுமான திரு. அவினாஷ் கவுல் அவர்கள் கூறும்போது “ Kargil: Valour & Victory கார்கில் போர் பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுப் பதிவு. எந்த சூழலிலும் தோல்வியை ஏற்காத இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதிக்கு தலைவணங்குகிறது. இந்த 72-ஆவது குடியரசு தினத்திற்கான ஒரு சிறப்பு படைப்பு இது விறுவிறுப்பான, சிறந்த, உயரிய தயாரிப்பு தரமும் மற்றும் கதையம்சமும் கொண்ட. காணவேண்டிய ஆவணப்படம். இது பார்வையாளர்களுக்கு சிந்தை கவரும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்தார்.

காணுங்கள் ‘Kargil: Valour & Victory’, ஜனவரி 26, செவ்வாய் இரவு 9 மணிக்கு, HistoryTV18-இல் மட்டும்.

நிகழ்ச்சி விளம்பரத்துக்கான இணைப்பு – https://youtu.be/jIimOP_En9o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *