கார்த்திகை தீப திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபதரிசனம்…

ஆண்டுக்கு ஒருமுறை சில மணி துளிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி…

திருவண்ணாமலை: 19.11.2021

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து காலையிலும் மாலையிலும் விநாயகர், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.

பத்தாம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது, தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருக்கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை ஆறு மணி அளவில் மகா தீபம் ஏற்றப்படுவது முன்னிட்டு சரியாக 4.30 மணி அளவில் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பூமாலை அலங்காரத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் தோளில் சுமந்தபடி தாண்டவம் ஆடிக்கொண்டு அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 16 கால் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினார்கள்.

சரியாக 6 மணி அளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரக்கூடிய அர்த்தநாரீஸ்வரர் ஆனந்ததாண்டவம் ஆடி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், பின்னர் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது, அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கரகோசத்துடன் மஹா தீப தரிசனத்தை கண்டு வழிபட்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து திருக்கோயிலில் கட்டளைகாரர் உபயதாரர் மற்றும் கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி 20 ஆயிரம் பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலின் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கியதால் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும் வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் சென்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *