சென்னை, அக்டோபர் 24: உலகிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கும் நோக்குடன், ‘International Tamilar Business Conclave-2025’ எனும் சர்வதேசத் தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடானது, உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் வர்த்தக வல்லமையைப் பறைசாற்றுவதோடு, தமிழகப் பாரம்பரியத்தின் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக அரங்கில் கொண்டு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது.
2025 டிசம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மலேசியாவில் உள்ள ஹோட்டல் விந்தாம் கார்டன் ஐ-சிட்டி & மிட்லேண்ட்ஸ் கண்வென்ஷன் சென்டர் ஷா ஆலம் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இதில் 23 ஆம் தேதி மலேசியாவில் உள்ள தமிழர் வர்த்தக சங்கம் 4வது ஆண்டு விழாவும் நடைபெறுகிறது. விழாவில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மலேசிய வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளார்கள், விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் மதிய உணவாக பரிமாறப்படும்.
மாநாட்டின் நோக்கங்கள்:
- தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருட்களை மீட்டுருவாக்கம் செய்தல்
- தமிழ்நாடு தொழில்முனைவோர்களை சர்வதேச தமிழ் வர்த்தகர்களுடன் இணைத்தல்.
- தமிழ்நாட்டு பாரம்பரிய தொழில்களை சர்வதேச தமிழ் வர்த்தகர்கள் அவர்களது நாட்டில் மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த மாநாடு அமைகிறது.
- தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகமெங்கும் பிரபலப்படுத்துதல்.
- தமிழ்நாட்டு பாரம்பரிய சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும் சர்வதேசக் கூட்டு முயற்சியாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.
- சமுதாயம் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவித்தல்: ஒவ்வொரு வெளிநாடு வாழ் தமிழரின் வீடுதோறும் ஒரு தொழில் முனைவோரை உருவாக்குதல்
இந்த மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் மலேசியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்ச்சியை மலேசிய தமிழர் வர்த்தக சபை, டேன் மில்லட்ஸ், ஆர்.பி.ஜி. குழுமம் – கனடா, ஆஸ்திரேலியா ஆசியா இந்தியா வர்த்தக நிறுவனம் – ஆஸ்திரேலியா, மேப் டிஜி, பிஸ் நெட் சொல்யூஷன்ஸ், தாய்மடி மரச்செக்கு இயந்திரங்கள் மற்றும் சென்டெக் இன்ஞினியரிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள், மலைவாழ் மக்கள் தயாரிப்புகள், பனைப் பொருட்கள், தென்னை விவசாயிகள், பாரம்பரிய மூலிகை பொருள் தயாரிப்பாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தியில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் வர்த்தகர்கள், மற்றும் மேற்படி தொழில்துறைக்கான இயந்திரம் உற்பத்தியாளர்கள் என 55 தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சென்னையில் இருந்து 22 தொழில் முனைவோர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
குறிப்பாக இந்த மாநாட்டில், இலங்கையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள், இறக்குமதியாளர்கள், தொழில்முனைவோர்கள், இலங்கை அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் உலகெங்கிலிருந்தும் வரும் தமிழ் வர்த்தகர்கள், தொழில் முனைவோரிடம் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக காட்டி வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சுந்தர், நிறுவனர், மில்லட் பவுண்டேஷன் மற்றும் பாலகிருஷ்ணன் பத்துமலை, தலைவர், தமிழர் வர்த்தக சங்கம் மலேசியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு: எஸ். சுந்தர், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர். மொபைல் 93675 50555
ஊடக தொடர்புக்கு: கார்த்திக் / 98943 61558
