ஆகஸ்ட்.11- ‘தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்’ என்றழைக்கப்படும் பிரபல ‘போலார் பேர்’ நிறுவனம், தேசிய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் பயணம் தொடங்கப்பட்ட சொந்த ஊரான பெங்களூருவிலேயே தனது 100-வது கிளையையும் தொடங்கி சாதனை படைத்துள்ளது.
முழுக்க முழுக்க இந்தியர்களின் சுய முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரு ஐ.டி.பி.எல். அருகே தனது முதல் கிளையைத் தொடங்கியது. இன்று 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 கடைகளுடன் விரிவடைந்து, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு இனிப்பக (டெசர்ட்) நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.
தொழில்முனைவோர் கிஷோர் ராய் என்பவரால் தொடங்கப்பட்ட போலார் பேர் நிறுவனம், தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி தனது கிளையை படிப்படியாக உயர்த்தியது. ஆரம்பம் முதலே வெளிநாட்டு முதலீடுகள் இன்றி, சுய நிதி மூலம் மட்டுமே செயல்பட்டு வந்துள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வலுவான பிராஞ்சைசி நெட்வொர்க்கையும் பெற்று வெற்றி நடைபோடுகிறது.
பெங்களூரில் சிறிய அளவில் தொடங்கி பல நகரங்களுக்கு பரவியுள்ள போலார் பேர் நிறுவனம், விதவிதமான ஐஸ்கிரீம் சண்டேக்கள், ஷேக்குகள், சர்பெட்கள் மற்றும் ஐஸ்கிரீம் கேக்குகள் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஐஸ்கிரீம் பிரியர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் இடமாக இது திகழ்கிறது.
இதுகுறித்து போலார் பேர் நிறுவனத்தின் நிறுவனர் கிஷோர் ராய் கூறியதாவது:
“ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மறக்க முடியாத ஐஸ்கிரீம் சுவையை வழங்க வேண்டும் என்ற எளிய லட்சியத்துடன் தான் 2008-இல் போலார் பேர் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் வெறும் ஐஸ்கிரீம் கப்புகளை மட்டுமே விற்று வந்தனர். ஆனால், ‘சண்டே’ வகை ஐஸ்கிரீம்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன்படியே தரமான பால் பொருட்கள் மற்றும் சிறப்பு ரெசிபிகளைக் கொண்டு சுவையான சண்டேக்களை உருவாக்கினோம். இன்று எங்கள் கடைகள் அனைத்தும் மக்கள் இணைந்து கொண்டாடும் இடமாக மாறியுள்ளன. பெங்களூரில் மட்டுமே 100 கடைகளைத் திறந்திருப்பது நமது லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி. இந்திய அளவில் ஒரே நகரத்தில் 100 கடைகளை அமைத்தது மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே சாதித்த ஒன்றாகும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்றார்
நிறுவனத்தின் வணிகம் மற்றும் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் பிரகாஷ் கூறியதாவது:
“நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தரத்திற்கு தான் முதல் முன்னுரிமை. உயர்தரப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது முதல் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான தரத்தை பராமரிப்பது வரை கவனமாகச் செயல்படுகிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய சுவைகள், தாராளமான அளவு மற்றும் விதவிதமான காம்போக்களை வழங்கி வருகிறோம். 200-வது கிளையைக் கொண்டாடும் இந்த வேளையிலும் தரம், புதுமை மற்றும் சிறந்த சேவையையே இலக்காகக் கொண்டு இயங்குகிறோம்.”
இந்திய மக்களின் இனிப்பு சாப்பிடும் பழக்கம் தற்போது பெருமளவில் மாறியுள்ளது. முன்பு எப்போதாவது ஒருமுறை சாப்பிட்ட ஐஸ்கிரீம், இன்று இரவு உணவுக்குப் பிறகு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. மக்களின் இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்ட போலார் பேர் நிறுவனம், அதற்கேற்ப புதிய வகை சண்டேக்களையும், அமர்ந்து சாப்பிடுவதற்கான சிறந்த சூழலையும் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சிக்கு பிராஞ்சைசி (Franchise) முறையே முக்கியக் காரணம். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கடைகள் நீண்டகால பிராஞ்சைசி கூட்டாளர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் போலார் பேர் நிறுவனம் வலுவாகக் காலூன்றியுள்ளது.
இந்த மைல்கல்லை எட்டியுள்ள போலார் பேர் நிறுவனம், அடுத்த கட்டமாக ஏற்கனவே இருக்கும் சந்தைகளை பலப்படுத்துவதோடு, இந்தியளவில் மேலும் பல புதிய நகரங்களுக்கும் தனது கிளையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றார்.
