கோவை: இந்தியாவில் அமேசானின் போக்குவரத்து வலையமைப்பில் 3,000 மின்சார லாரிகளை இயக்க அமேசான் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்திய மின்னணு வணிகத் துறையில் ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய மின்சார லாரி பயன்பாட்டு முயற்சியாக இது அமைந்துள்ளது. கடைசி நிலை விநியோகத்தைக் கடந்து, சரக்குப் போக்குவரத்தின் அடுத்தடுத்த நிலைகளிலும் நீண்ட தொலைவு வழித்தடங்களிலும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
முதல் தொகுதி டாடா மின்சார லாரிகளை டெல்லியில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அமேசான், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெல்லி அரசின் மூத்த பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமேசானின் போக்குவரத்துத் தேவைகளுக்கான மின்சார லாரிகளை டாடா மோட்டார்ஸ் வழங்கும். அவற்றை அமேசானின் போக்குவரத்துக் கூட்டாளி நிறுவனங்கள் சொந்தமாகக் கொண்டு இயக்கும். பண்டிகைக் காலத்தில் டெல்லியில் தொடங்கும் முதற்கட்டப் பயன்பாட்டில், இலகுரக மற்றும் நடுத்தர ரக மின்சார லாரிகள் மூலம் சரக்குகள் மையங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே கொண்டு செல்லப்படும்.
அடுத்தகட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழு மாநிலங்கள் மற்றும் ஆறு முக்கிய மின்னணு வணிகப் பகுதிகளை இணைக்கும் 2,800 கி.மீ. நீளமுள்ள டெல்லி–பெங்களூரு–சென்னை சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தில் மின்சார லாரிகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மின்சார வாகன மின்னேற்றக் கட்டமைப்பு வழங்குநரான யாஹ்வியுடன் இணைந்து மின்னேற்ற மையங்கள் அமைக்கப்படுகின்றன.
2040ஆம் ஆண்டுக்குள் நிகர கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் அமேசானின் இலக்கிற்கு இத்திட்டம் வலுசேர்க்கிறது. ஏற்கெனவே, இந்தியாவின் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 15,000க்கும் அதிகமான மின்சார வாகனங்களை அமேசான் இயக்கி வருகிறது.
மின்சார லாரிகளுக்கான மின்னேற்ற வசதிகள், பராமரிப்பு மற்றும் இயக்க ஆதரவு ஆகியவற்றுடன், பெரிய அளவிலான சரக்குப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இக்கூட்டாண்மை எடுத்துக்காட்டும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து இலக்குகளுக்கும், பி.எம். இ-டிரைவ் உள்ளிட்ட திட்டங்களுக்கும் இம்முயற்சி ஆதரவளிப்பதுடன், சரக்குப் போக்குவரட்டால் ஏற்படும் மாசு வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
