போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா வேலூர் ஆற்காடு சாலை, அண்ணாசாலை, மக்கான் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டறிந்தார். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படியும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும்படி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில பெண்களிடம் புகார் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், போலீஸ் நிலையத்தில் உள்ள வருகை பதிவேடு, குற்ற வழக்குகளின் ஆவணங்களை பார்வையிட்டார். போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கும்படியும், போலீசாரின் இருசக்கர வாகனங்களை தவிர மற்றவற்றை அப்புறப்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிடம் வாரவிடுமுறை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

ஆய்வுக்கு பின்னர் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். வேலூர் சரகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்கும்படி தெரிவித்துள்ளேன்.

ஆட்கள் பற்றாக்குறை என்றுகூறி வாரவிடுமுறை அளிக்காமல் இருக்க கூடாது. போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பதை நடைமுறைப்படுத்தும்படி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் போலீசார் முககவசம் அணிந்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *